நியூஸி சேச்சி

 

துளசி கோபால் (ப்ரியமான துளசி சேச்சி) எழுதிய ‘நியூசிலாந்து’ அனுபவங்கள் புத்தகம் வெகு விரைவில் வெளியாகிறது. அதற்கு நான் எழுதிய முன்னுரை
—————————————————————————–

இருபத்து ஐந்து வருஷம் முந்தி முதல் தடவையாக வெளிநாட்டுக்குப் போனபோது என் அழகான வீட்டுக்காரி -அப்போ அப்படித்தான் இருந்தாள்- ‘டிக்கட் எடுத்து வச்சுண்டாச்சா?, பாஸ்போர்ட் எடுத்து வச்சாச்சா?’ இம்மாதிரியான ஸ்டாண்டர்ட் கேள்வித்தாளுக்கு வெளியே கடந்து, பருப்புப் பொடி, புளியஞ்சாதப் பொடி, எள்ளுப்பொடி இன்னோரன்ன சமாச்சாரங்களையும் வினாத் தாளுக்குள் கொண்டு வந்து என்னைத் தாளித்தபடி இருந்தாள். புதுப் பொண்டாட்டியோடு வந்து சேர்ந்த புது மாமியார் புண்ணியத்தில் வசம்பு, திப்பிலி, சுக்கு, சீரகம், கடுக்காய் என்று டப்பா செட்டியார் கடையில் பாதியை கொள்முதல் செய்து மூட்டை கனம் கூடியது.

சிங்கப்பூர் தானே போறேன். அதுவும் ஆறே ஆறு மாசம்.

பூஞ்சை உடம்பு, மூக்கு வேறே சதா சப்த ஸ்வரம் பாடறது. அங்கே குளிரோ வெயிலோ. ஏதாவது உடம்புக்கு வந்தா, கைகால் குடைச்சலா, தலைவலியான்னு கேட்க நம்ம மனுஷா யார் இருக்கா? கைவைத்தியம் பார்த்துக்க வேணாமா??

இந்த பாசத் தலைவலியோடு ஏர்போர்டுக்குப் போக ஆட்டோவில் பேரம் பேசி ஏறி உட்கார்ந்தபோது, விவித்பாரதி விளம்பரம் அடுத்த ப்ளாட்டில் சத்தமாக ஒலித்தது – ‘தலைவலியா, கைகால் குடைச்சலா?’ ஆக்ஷன் 500 அலுப்பு மாத்திரை விளம்பரம். போகிற வழியில் அதையும் வாங்கி சட்டைப்பையில் திணித்தாள் பெண்டாட்டி. நல்லவேளை, டிரான்சிஸ்டர் ரேடியோ கிடைக்கவில்லை.

அப்புறம் காடாறு வருஷம், நாடாறு மாதம் காலகட்டம். மெய்யாலுமே தலைவலி, கைகால் குடைச்சல், நாக்கு செத்துப் போவது (என்ன ஒரு பிரயோகம்!) இப்படியான அவஸ்தைகளோடு உலகம் சுற்றி வந்தபோது வீட்டு லிஸ்டில் பலதும் யந்திர கதியில் மூட்டை கட்டப்பட்டு, பிறகு புறப்படும் ஏர்போர்ட்டிலோ புகுந்த நாட்டு ஏர்போர்ட்டிலோ கழித்துக் கட்ட வேண்டிப் போனது. அதிக பட்ச சுமை வரி, அனுமதிக்கப்படாத சமாச்சாரங்கள் – இட்லி மிளகாய்ப்பொடியை ஹார்லிக்ஸ் பாட்டிலில் அடைத்து இங்கிலாந்து எடுத்துப் போய் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்துக்கா வெடி வைக்கப் போறேன், போங்கப்பா- இப்படியான காரணங்கள்.

மூட்டை கனம் குறைய இன்னும் ரெண்டு காரணம், நான் சமைக்கக் கற்றுக் கொண்டேன். ஸ்காட்லாந்தில் பாகிஸ்தானி கடையில் எம்.டி.ஆர் தோசை மாவு முதல் ஆரிய வைத்தியசாலை திரிபலாதி சூர்ணம் வரை கிட்டும். ‘புரட்டிக்க தைலம்’ மலையாளத்தில் எடுத்துத்தர வாரியர்தான் இல்லை. கூட பெண்குட்டியும்.

அன்ன ஆகாரம், மூக்கடைப்பு மருந்து, 90 செ.மீ கழுத்தளவு பனியன் போன்ற அடிப்படை சவுகரியங்கள் சுபாவமாக உடம்போடும் மனசோடும், போகிற இடம் தாண்டி படிய ஆரம்பித்தபோது, இருக்கப்பட்ட இடம் என்ற போதம் இல்லாமல் படுத்ததும் சுகமாக நித்திரை வரத் தொடங்கிய போது, பழகும் மனிதர்களும், சூழ்நிலையும், செய்யும் தொழிலும், பணியிடமும் ஒரே நாள் பழக்கத்தில் உள்ளூரான போது, கொஞ்சம் நின்று கவனித்தேன். என் லண்டன் டயரியும், எடின்பரோ குறிப்புகளும், யார்க்ஷயர் பதிவும், இன்னும் மூன்று விரல், விஸ்வரூபம் நாவலும் எல்லாம் இந்த கால, இட வர்த்தமான பேதம் கடந்தபோது உருவானவை.

என் பிரியப்பட்ட துளசி சேச்சி ஒரு குடும்பத் தலைவியாக, வெளிநாடு குடிபெயர்வதில் அனுபவப் பட்டிருக்கக் கூடிய சிரமங்கள் நிச்சயம் ஒற்றையனாக நான் எதிர்கொண்டதை விட அதிகமாகவே இருந்திருக்கலாம். ஒரு குடும்பத் தலைவியாக அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் அடியேனுடைய தனிக்காட்டு ராஜா அனுபவங்களை விட சுவாரசியமானதாகவே இருந்திருக்கலாம். இப்படி அனுமானித்தபடி தான் புத்தகத்தைப் புரட்டினேன். பாதிதான் சரி. அவர் கஷ்டமே படவில்லை. அப்படி நம்ப வைத்து விடுகிறார். எதிரில் உட்கார்ந்து, அதை ஏன் கேக்கறீங்கன்னு சிரித்துக் கொண்டே சொல்லும் பாணியில் சிரமத்தையும் ரசிக்க வைக்கிறார். அப்புறம் அவருடைய அனுபவங்கள். இது எழுத ஆரம்பித்து, அடுத்த (ரெண்டாம்) புத்தகம் என்று நம்ப கஷ்டமாக இருக்கிறது. ஞான் சத்யம் பரயுகயாணு எண்டெ பொன்னு சேச்சி!

‘அங்கே (வெளிநாட்டுலே) நம்மாளுங்க இருக்காங்களா, உப்பு புளி மிளகாய் எல்லாம் கிடைக்குதான்னு பார்த்தேனே தவிர, அங்கே வேறே என்ன பாஷை இருக்கு, அவங்க பழக்க வழக்கம் எப்படின்னு எல்லாம் தெரிஞ்சுக்கத் தோணலை’ – அதான், அதேதான் எனக்கும் வந்த ஸ்டார்ட்டிங் ட்ரபிள். மாசாந்திர சுற்றுப் பயணம் போய் ஒரு நாள், ரெண்டு நாள் ஒரு ஊரில், நாட்டில் தங்கி இருந்து இதயம் பேசுது, புருவம் பாடுதுன்னு பார்த்ததைப் பட்டியலாக எழுதித் தள்ளுவது எளுப்பம். வந்தேன், இருக்கேன்னு ஆசுவாசப்படுத்திக்கிட்டு எழுதறது தான் சிரமம். புலம் பெயர்ந்த இலக்கியத்துக்கும், பயண இலக்கியத்துக்கும் நடுப்பட்டது இது. தமிழில் அபூர்வமான நிகழ்வு. துளசி சேச்சிக்கு இது கைவந்த கலையாக இருக்கிறது.

துளசி கவனத்தில் இருந்து ஒரு சின்ன விஷயம் கூட தப்புவது இல்லை. சேச்சி கணவர் கோபால் ‘நியூசியிலே பொண்ணுங்க எத்தனை அழகான வைர மோதிரம் போட்டிருக்காங்க தெரியுமா? நீயும் என்னோட வந்தா உனக்கும் வாங்கித் தரேன்’னு சொன்னபோது, மோதிரப் பரிசை விட இவருக்கு ஆனந்தம் – கோபால் அங்கே வைர மோதிரம் போட்ட பெண்களை மட்டும் பார்த்திருக்கிறார்! கோபால் ஆனாலும் சாது. மோதிரம் போட்ட பெண்ணின் விரலை மட்டும் பார்த்திருக்கார்!

கொஞ்சம் மானுடவியல் (மாவோரிகளின் வாழ்க்கை, உணவு முறை, சாவுச் சடங்குகள் இப்படி), வேறே எங்கும் காணக் கிடைக்காத அசாதாரணமான நிகழ்ச்சிப் பதிவு (பெங்குவின் கூட்டம் சாலையைக் கடப்பது), நிதி நிலை(பிஜியில் இருந்து வந்த குஜராத்திகள் காசு சேரச் சேர அங்கே கொண்டுபோய் சேமித்து விட்டுத் திரும்புவது), நீதி நிலை (ஜூரராகப் போன அனுபவம்), சமையல் குறிப்பு (அன்சோ பிஸ்கட்), இன்றைய அரசியல் (ந்யூ லேபர் கட்சி 97 இடத்துக்கு தேர்தலில் நின்று, ஒரே ஒரு சீட் மட்டும் கைப்பற்றியது – நம்ம ஊர் நினைப்பு வருது இல்லே)..

இப்படி, போகிற போக்கில் நுணுக்கமாக நியூசி வாழ்க்கையைப் பதிகிறார் துளசி. இதை எல்லாம் ஒரு நாவலாக்கி இருக்கலாமே என்று எனக்குள்ளே இருக்கும் கதைக்காரன் கேட்கிறான். அவன் கிடக்கான்.

அப்புறம் துளசியின் ஹோம் மேக்கர் அனுபவம் இயல்பாக புத்தகம் முழுக்க விரவி இருக்கிறது. குடி போன இடத்துலே ஆத்திர அவசரத்துக்கு டாக்டர் பக்கத்துலே இருக்காரான்னு தெரிஞ்சுக்கறதுலே எல்லோருக்கும் அக்கறை உண்டே. சேச்சி சொல்றார் – நம்ம பிள்ளைங்களுக்குத்தான் சனிக்கிழமை பார்த்து சொல்லி வச்ச மாதிரி காய்ச்சல் வருமே.

நியூசி பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பிக்கப்படுவதைப் பற்றிச் சொல்லும்போது, துளசி சேச்சி கை கொள்வது ஒரு அன்பான, கரிசனம் நிறைந்த தாயின் நோக்கு.

பெண் எழுத்து இந்த நுட்பம்தான்.
பிறந்த சிசு மரித்தபோது மார்பில் பால் கட்டி அவதிப்பட்டபடி, அந்தக் குழந்தையில் மலம் உலர்ந்த இடுப்புத் துணியைப் பார்த்துக் கலங்கும் தாயின் சோகத்தைச் சொல்லும் ஒரு புதுக்கவிதையை ஒரு முறை சுஜாதா சாரிடம் சிலாகித்தேன்.

‘நல்லாத்தான் இருக்குப்பா. ஆனா, அனுபவம் எங்கே?’ என்றார் அவர். திருமதி சுஜாதா காப்பியோடு வர, அவரைக் காட்டி, ‘இவங்க கிட்டே கேளு. தெரியும். எங்க பெண் குழந்தை பிறந்ததும் இறந்து போய், இவங்க பட்ட பாடு’. பெரியாழ்வார் ஆண்டாளாகப் பாடினதும், நாயகி பாவமும் எல்லாம்? நான் விடாமல் அவர் வாயைப் பிடுங்க, ‘சொன்னாக் கேளு. ஆம்பளை எழுத முடியாதுன்னா முடியாதுதான்’.

நான் ரசிக்கிற எழுத்தை எல்லாம் அவரோடு பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம். இதில் பல கட்டுரைகளை துளசி ‘மரத்தடி’ இணையக் குழுமத்தில் எழுதி வந்தார். நான் எடின்பரோவில் இருந்த காலகட்டம். ஜூலை 6, 2005 அன்று அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கு சேச்சியின் ஒரு கட்டுரையை பார்வேர்ட் செய்தேன். சுஜாதா சாரின் ரத்தினச் சுருக்கமான பதில்

From: rangarajan S [mailto:writer_sujatha@hotmail.com]
Sent: Thursday, July 07, 2005 12:09 PM
Subject: RE: hi from era.murukan (with an interesting blog entry I read today)

Murukan
I eventually discoverd it in unicode and read the NZ lady’s (Ms.Thulasi) blog; interestig though long.

சுஜாதா சார், துளசி புத்தகம் இதோ வந்திருக்கிறது. ரசித்துப் படித்தேன். உங்களோடு பகிர்ந்து கொள்ளணுமே!

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன